சிராஜுடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கான காரணத்தை விளக்கிய டிராவிஸ் ஹெட்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகளிரவு ஆட்டமாக அடிலெய்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 140 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 64 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 337 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலையும் பெற்றது. பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் சொதப்பியது.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியின் போது சதமடித்து விளையடி வந்த டிராவிஸ் ஹெட்ட் 140 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அப்போது விக்கெட்டை இழந்த விரக்தியில் பெவிலியனுக்கு திரும்பிய டிராவிஸ் ஹெட்டை பார்த்து முகமது சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், “எனது விக்கெட்டினை வீழ்த்தியதும் நான், அவர் நன்றாக பந்துவீசியதாக கூறினேன். ஆனால், அவர் அதனை வேறு விதமாக எடுத்துக்கொண்டு என்னை பெவிலியனுக்கு செல்லுமாறு ஆக்ரோஷமாக சைகை செய்தார். உண்மையில், அவரது செயல் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், அவர் அப்படி கொண்டாட விரும்பினால் அப்படியே கொண்டாடிவிட்டு போகட்டும்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து முகமது சிராஜிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.