ஐபிஎல் 2025: தொடரின் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களில் ஒரு சிலர் சில போட்டிகளை தவறவிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் மும்பை அணி ரசிகர்களுக்கு ஒரு மோசமான செய்தியும் உள்ளது, உண்மையில் ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால், கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பல போட்டிகளில் ஸ்லோ ஓவர் ரேட்டில் பந்து வீசியது.
மேலும் கடந்த சீசனின் கடைசிப் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட்டில் பந்து வீசியது. இதன் காரணமாக அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக எதிர்வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டியை ஹர்திக் பாண்டியா தவறவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பிரித் பும்ரா
இந்த பட்டியலில் இந்திய அணியின் நம்பர்-1 வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் இடம்பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வரும் பும்ரா தற்போதுவரை கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் அவர் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் அடிப்படையில் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடரின் முதலிரண்டு வாரங்களைத் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் ஏப்ரல் முதல் வாரத்திற்கு பிறகு தான் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேஎல் ராகுல்
இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுலும் இடம்பெற்றுள்ளார். கேஎல் ராகுலுக்கு எந்த தடையும் இல்லை, காயமும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், ஐபிஎல் 2025 இன் தொடக்கத்தில் அவர் ஏன் கிடைக்காமல் போகிறார் என்ற கேள்வி நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கும். அத்ற்கான பதில், எதிர்வரும் ஐபிஎல் தொடரின் போது கேஎல் ராகுல் தனது குழந்தை பிறப்பிற்காக காத்திருக்கிறார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆம், முதல் முறையாக அப்பாவாகப் போகிறார் கேஎல் ராகுல். தகவல்களின்படி, அவர் தனது குடும்பத்துடன் தங்கியிருக்கும் போது தனது முதல் குழந்தையை வரவேற்க விரும்புகிறார். அதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் சில் போட்டிகளை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக ஐபிஎல் 2025 இன் மெகா ஏலத்தில், அவர் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் ரூ 14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.