3rd ODI: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய அணியில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கபட்டது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் தொடர்ந்து உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடி ஷுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் அவருடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 112 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கி அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டிய 17 ரன்களையும், கேல் ராகுல் 40 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட் 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட்டும் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பான்டன் மற்றும் ஜோ ரூட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்கள் எடுத்திருந்த டாம் பாண்டன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அக்ஸர் படேலும் 24 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய ஹாரி புரூக் 19, ஜோஸ் பட்லர் 6, லியாம் லிவிங்ஸ்டோன் 9 ரன்களில் என இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய கஸ் அட்கின்சன் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 38 ரன்களைச் சேர்த்த்த நிலையில், மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியும் அசத்தியது.