ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. 

Advertisement

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

Advertisement

அச்சமயத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் 21 ரன்களைச் சேர்த்த நிலையில் உஸ்மான் கவாஜாவும், 09 ரன்களைச் சேர்த்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனியும் அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.  அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி  75 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தண்டியது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது 9ஆவது டெஸ்ட் சதத்தையும், மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிவ் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தையும் பதிவுசெய்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். 

அதன்பின் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷும் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து 18 பவுண்டரிகளுடன் 158 ரன்களை எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டையும் ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றினார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 405 ரன்களை எடுத்துள்ளது. இதில் அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 07 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News