3rd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்மித் - கார்ஸ்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்களிலும், ஸாக் கிரௌலி 18 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 44 ரன்களுக்கு, ஹாரி புரூக் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இதனால் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜோ ரூட் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜோ ரூட் 104 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 271 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் ஜேமி ஸ்மித் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜேமி ஸ்மித் 51 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 3 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.