காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்த முயற்சித்தனர்.
அச்சமயத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் 21 ரன்களைச் சேர்த்த நிலையில் உஸ்மான் கவாஜாவும், 09 ரன்களைச் சேர்த்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனியும் அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 75 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸ்மித் 25 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.