காபா டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் 13.2 ஓவர்களுடன் கைவிடப்பட்ட நிலையில், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதத்தின் காரணமாக நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை குவித்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்ததுடன் 70 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லையன் ஆகியோர் ரன்களைச் சேர்க்க தவறிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியும் இன்னிங்ஸைத் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மிட்செல் மார்ஷின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவரும் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அச்சமயத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாளின் உணவு இடைவேளை எடுக்கப்பட்டது. அதன்படி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் கேஎல் ராகுல் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 423 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. ஏற்கெனவே கடந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில், இப்போட்டியிலும் தடுமாறி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.