4th Test, Day 1: ராகுல் - ஜெய்ஸ்வால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இங்கிலாந்து!

Updated: Wed, Jul 23 2025 17:42 IST
Image Source: Google

Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லிடாம் டௌசனும், இந்திய அணியில் சாய் சுதர்ஷன், அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஷர்துல் தக்கூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இப்போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்கும் வாய்ப்புகளைக் குறைத்ததுடன், தேவைப்படும் பந்துகளில் மட்டும் பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் காரணமாக இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது விக்கெட்டுகள் ஏதும் இழப்பின்றி 78 ரன்களைச் சேர்த்துள்ளது.

Also Read: LIVE Cricket Score

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களையும், கேஎல் ராகுல் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடான் கார்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் பந்துவீசிய நிலையில் யாரும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை