4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!

Updated: Sat, Feb 24 2024 11:41 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணி முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து அசத்த, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஒல்லி ராபின்சன் 31 ரன்களுடனும் தொடர்ந்தர். இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஒல்லி ராபின்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்கள் எடுத்த நிலையில் ஒல்லி ராபின்சன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சோயப் பஷீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 27 ரன்களையும், ஷுப்மன் கில் 4 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை