4th Test, Day 4: ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வலுவான முன்னிலை; இந்திய அணி தடுமாற்றம்!

Updated: Sat, Jul 26 2025 17:41 IST
Image Source: Google

Manchester Test: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிரௌலி 84 ரன்களுக்கும், பென் டக்கெட் 94 ரன்களுக்கும், ஒல்லி போப் 71 ரன்களுக்கும், ஹாரி புரூக் 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 544 ரன்களைக் குவித்துள்ளது.

இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 76 ரன்களுடனும், லிடாம் டௌசன் 21 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் லியாம் டௌசன் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிரைடன் கார்ஸும் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸும் சதமடித்து அசத்த இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை எட்டியது. அதன்பின் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 141 ரன்களில் பென் ஸ்டோக்ஸும், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 47 ரன்களில் பிரைடன் கார்ஸும் ஆட்டமிழந்தார். 

இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை