IND vs AUS, 4th Test: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; டிராவை நோக்கி செல்லும் ஆட்டம்!
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது . இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 480 களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 309 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கே.எஸ் பரத். இருவரும் உணவு இடைவேளை வரை நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். உணவு இடைவேளைக்குப்பின் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கே.எஸ் பரத் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணி 393 ரன்களை எடுத்து இருந்தது.
விராட் கோலி மற்றும் கே எஸ் பரத் ஆகியோர் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்திருந்தனர். இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்தார் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல். இவர் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி வேகமான ரன் குவிப்பிலும் ஈடுபட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 28ஆவது சதத்தை பதிவு செய்தார் . சர்வதேச போட்டிகளில் அவர் அடிக்கும் 75 ஆவது சதம் இதுவாகும்.
இந்த ஜோடியின் வேகமான ரன் குவிப்பால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடந்து சென்றது . சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேல் இந்தத் தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் நங்கூரமிட்டு விளையாடிய விராட் கோலி 150 ரகளைக் கடந்தார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இந்த ஜோடி அதிரடியாக ஆடத் தொடங்கியது . இதன் காரணமாக இந்திய அணியின் முன்னிலை வேகமாக உயர்ந்தது. அக்சர் பட்டேல் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிக்ஸர்களாக அடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
இந்திய அணியின் எண்ணிக்கை 555 ஆக இருந்தபோது மிச்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் அக்சர் படேல். சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 79 ரன்களில் அவுட் ஆனார். இதில் நான்கு சிக்ஸர்களும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஆட வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடும் முயற்சியில் ஏழு ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார் விராட் கோலி.
ரவிச்சந்திரன் அஸ்வினின் விக்கெட்டை தொடர்ந்து ஆட வந்த உமேஷ் யாதவ் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் இல்லாததால் அதிரடியாக ஆட முற்பட்ட விராட் கோலி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாட் மர்ஃபி வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 364 பந்துகளை சந்தித்த விராட் கோலி 186 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். இதில் 15 பவுண்டரிகள் அடங்கும்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதன் காரணமாக இந்திய அணி ஆல் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. 571 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் நேதன் லையான் மற்றும் டாட் மர்பி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 91 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் மூன்று ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. மேலும் ஆஸ்திரேலியா அணி 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. நாளை ஒருநாள் மட்டுமே இந்த டெஸ்ட் போட்டியில் எஞ்சி இருப்பதால் இந்தப் போட்டி ஒன்று டிராவில் முடிவடையும் என்றே கணிக்கப்படுகிறது.