IND vs AUS, 4th Test: டிராவில் முடிந்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!

Updated: Mon, Mar 13 2023 16:39 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் இலக்கை எட்டி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றது. அதேசமயம் இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. அதில் விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128, அக்‌ஷர் படேல் 79 ரன்கள் எடுத்தார்கள். 

அதன்பின் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸை இன்று தொடர்ந்தது. இதில் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 36 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. குன்னேமன் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த லபுசாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

அதேசமயம் மறும்முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த  டிராவிஸ் ஹெட், 90 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 78.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. லபுஷேன் 63, ஸ்மித் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய வராமல், 4ஆவது டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்து இரு அணிகளும் கைகுலுக்கிக் கொண்டன. இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்த விராட் கோலி ஆட்டநாயகனாகவும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை