அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து வெற்றி பெற்றுள்ளோம் - ரோஹித் சர்மா!

Updated: Mon, Mar 13 2023 20:23 IST
4th Test: Our Comeback In Delhi Test Showed A Lot Of Character, And Fight, Says Rohit Sharma (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் எந்தவித பரபரப்புக்கும் பஞ்சமின்றி சிறப்பாக முடிந்தது. இந்த தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அகமதாபாத்தில் பிரமாண்டமாக தொடங்கிய 4ஆவது டெஸ்ட் போட்டியை முடிப்பதற்கு பிட்ச் சற்றும் கருணை காட்டவில்லை. பந்துவீச்சில் எந்த உதவியும் கிடைக்காததால் பேட்ஸ்மேன்கள் சரமாரியாக ரன்களை குவித்துவிட்டனர்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்கோருக்கு கவாஜாவின் சதம் காரணமாக இருந்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி கொஞ்சம் கூட சளைத்தவர்கள் இல்லை என்பது போல சுப்மன் கில், விராட் கோலி சதத்துடன் 571 ரன்களை குவித்தது. 2ஆவது இன்னிங்ஸை முழுவதுமாக விளையாட கூட நேரம் இல்லாததால் ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த கோப்பை வென்று கொடுத்தது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “இது மிகவும் சிறப்பான தொடராகும். இந்த தொடரின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல இந்த முறை நிறைய வீரர்கள் முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆடினர். பல கடினமான நேரங்களிலும் எங்களுக்கு சரியான விடை கிடைத்தது. டெல்லியில் வெற்றியை ஆரம்பக்கட்டத்திலேயே உறுதி செய்துவிட்டோம். இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை கொடுத்து போராடி தோல்வியடைந்தோம்.

இந்த முறை இந்திய அணியில் பல்வேறு வீரர்களும் தாமாக முன்வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு ஓய்வு கொடுத்தனர். டெஸ்ட் கிரிக்கெட் தான் மிகவும் கடினமான போட்டி, அதனை ஆடுவது அவ்வளவு எளிதல்ல. அந்தவகையில் என்னுடைய ஆட்டத்தில் முழு திருப்தியடைந்துள்ளேன். என்னுடைய தனிப்பட்ட சாதனைகளை ஓரமாக வைத்துவிட்டு, அணிக்கு என்ன தேவையோ, அதனை சரியாக செய்து வெற்றி பெற்றுள்ளோம். மிக மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தான் மீண்டும் ஒருமுறை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த முக்கியமான போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை