நான் இல்லாம ஜடேஜா இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Tue, Mar 14 2023 10:10 IST
4th Test: We Wouldn't Be The Same Or Lethal Enough Without The Other, Says Ashwin On Partnership Wit (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த  நான்காவது டெஸ்ட் போட்டி இரு அணிகளின் சிறப்பான பேட்டிங்கால் டிராவில் முடிவடைந்தது. இறுதியில் 2-1 என்ற கணக்கில் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. 

4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட்டுகள் மற்றும் 86 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 22 விக்கெட்டுகள் மற்றும் 135 ரன்கள் என பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டனர். இந்திய அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும், பேட்டிங்கில் மூன்று அரைசதங்கள் உட்பட 264 ரன்கள் விளாசினார்.

நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் இவர்கள் மூவருமே ஆவர். இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா-அஸ்வின் ஸ்பின் ஜோடியின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் சோதப்பிய காரணத்தினால் 3ஆவது போட்டியில் இந்திய அணி தோற்றது. 

கடைசியாக நடைபெற்ற அகமதாபாத் மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தாலும், அஸ்வின் இந்த இக்கட்டான சூழலிலும் முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 79 ரன்கள் அடித்து பங்களிப்பை கொடுத்தார். இப்படி இந்திய அணியின் ஆல்ரவுண்டர்கள் மூவரும் தனியாக நின்று தொடரை வெற்றி பெற்று கொடுத்தார்கள் என்றே கூறலாம். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் இணைந்து தொடர்நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. விருதைப் பெற்ற அஸ்வின் மற்றும் ஜடேஜா இருரிடமும், அவர்களுக்கு இடையேயான நட்பை பற்றி பேட்டியில் கேட்கப்பட்டது.

அப்போது பெசிய அஸ்வின், “எங்கள் இருவருக்கும் இடையே இத்தனை வருடம் இருந்த பயணம் மிகவும் சிறப்பானது. நீண்ட காலத்திற்கு முன்பாகவே எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை நாங்கள் தொடங்கி விட்டோம். எனக்கு ஜோடியாக அவரும் அவருக்கு ஜோடியாக நானும் இல்லை என்றால் இந்த பயணம் சாத்தியப்பட்டிருக்காது. நாங்கள் அதை உணர்ந்து கொள்ள வேண்டும், குறிப்பாக இதை நான் உணர்வதற்கு நீண்ட காலம் ஆகியது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாக தான் உணர்ந்தேன்.

ஜடேஜா அணியில் இருக்கும் பொழுது எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கும். ஒரு பக்கம் அவர் கடுமையான அழுத்தத்தை கொடுப்பார். மற்றொரு பக்கம் என்னால் எனது சிந்தனையில் உதிக்கும் பந்துகளை வீச முடியும். இன்னும் பல பந்துகளை சிந்தித்து வீசுவதற்கும் சுதந்திரம் கிடைக்கும். இந்த டெஸ்ட் தொடரில், குறிப்பாக டெல்லி டெஸ்ட் போட்டியில் ஜடேஜா பந்துவீசியது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. டெல்லியில் ஜடேஜா பந்துவீசிய விதம் தான் இப்போது கோப்பையை பெறுவதற்கு உதவியுள்ளது. 

ஜடேஜாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எதையும் பெரிதாக செய்யவேண்டும் என நினைக்காமல், மிகவும் எளிமையாக வைத்துக் கொள்வார். இருக்கும் குறைந்த வாய்ப்புகளை வைத்துக்கொண்டு மிகப்பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார். இதுதான் ஜடேஜாவை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அவரிடமிருந்து நான் இதை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை