5th Test Day 2: சதமடித்து மிரட்டிய ரோஹித், ஷுப்மன் கில்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் அந்த அணி முதல்நாள் மூன்றாவது செஷனின் தொடக்கத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 79 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் கடந்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், ஷுப்மன் கில் 26 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.
இதில் இன்றைய நாளின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் முன்னிலையையும் பெற்றுத்தந்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது சதத்தையும், ஷுப்மன் கில் தனது 4ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர்.
இதன்மூலம் இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 264 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷுப்மன் கில் 101 ரன்களுடனும், ரோஹித் சர்மா 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.