IND vs AUS: விராட் கோலிக்கு புகழாரம் சூட்டிய ஆஸி கேப்டன்!

Updated: Tue, Sep 20 2022 13:51 IST
'71 International Hundreds, One Would Be Very Brave To Write Off Virat Kohli': Aaron Finch (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உச்சத்தில் இருந்த விராட் கோலி கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாகி வந்தார். ஏனெனில் சதம் அடிப்பதற்கு பெயர்போன அவர், தனது 70 வது சதத்தை பூர்த்தி செய்த பிறகு 71 வது சதம் அடிப்பதற்கு ஆயிரம் நாட்களுக்கு மேலாக எடுத்துக் கொண்டார். 

ஆனாலும் இந்திய அணிலிருந்து அவர் நீக்கப்படவில்லை. ஏனெனில் தொடர்ச்சியாக அரைசதங்களை அடித்து வந்தார். இருப்பினும் விராட் கோலியிடம் சதம் மட்டுமே எதிர்பார்ப்பதால், இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் மூன்று வித போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார். அதன் பிறகு விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது என்று பல்வேறு விமர்சனங்கள் மீண்டும் எழத்துவங்கின. 

அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். 5 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் அடித்தார். அதில் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசிய பிறகு, அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டனர். ஏனெனில் அடுத்த சில வாரங்களிலேயே டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் விராட் கோலி ஃபார்மிற்கு வந்திருப்பது பெருத்த நம்பிக்கையை கொடுக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடர் துவங்குகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி மற்றும் அவரது ஃபார்ம் குறித்து பேசினார். 

அப்போது பேசிய அவர், “விராட் கோலி பார்மில் இருக்கிறார்! இல்லை! என்பதை பொறுத்து அவரை ஒதுக்கிவிட முடியாது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடலாம். ஆகையால் அவரைப் போன்ற ஒரு வீரரை எக்காரணம் கொண்டும் ஒதுக்கிவிட்டு திட்டங்கள் தீட்ட முடியாது. 71 சதங்கள் அடிப்பது என்பது எளிய காரியமா? அசாத்தியமான ஒன்று. ஆகையால் அவருக்கு என திட்டம் வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை