நான் எதிர்கொண்டதில் இவர்கள் மூவரும் தான் கடினமான பந்துவீச்சாளர்கள் - ஏபிடி வில்லியர்ஸ்! 

Updated: Tue, Jul 04 2023 11:45 IST
AB de Villiers Reveals the Three Most Formidable Bowlers He Encountered Throughout His Illustrious C (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களில் சாதாரண வீரர்களில் ஒருவராகவே வலம் வந்தார். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அனுபவத்தால் தன்னை வளர்த்து டி20 கிரிக்கெட்டில் எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தில் நாலாபுறங்களிலும் கற்பனை செய்ய முடியாத ஷாட்டுகளால் உருண்டு புரண்டு சுழன்றடித்து சிக்ஸர்களாக பறக்க விட்ட அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்.

அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 31 பந்துகளில் அதிவேக சதமடித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்த அவர் 2012இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 220 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 33 ரன்களை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தினார். அந்த வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆல் இன் ஆல் முழுமையான பேட்ஸ்மேனாக செயல்பட்டு தனக்கென்று தனித்துவமான தரத்தை உருவாக்கிய அவர் சர்வதேச அளவில் 19,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் அடித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு எதிராக பந்து வீசுவது என்றாலே பெரும்பாலான பவுலர்கள் தயங்குவார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே, இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் தம்முடைய கேரியரில் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாக பாராட்டியுள்ள ஏபி டீ வில்லியர்ஸ் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “2006இல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன். அவருடைய முதல் பந்து எனக்கு எளிதாக இருந்தது. மேலும் நான் பார்த்த போது அவர் என்னை பார்த்த நிலையில் பின்புறத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் என்னுடைய பேட் லிப்ட் பற்றி பேசினார். அடுத்த சில ஓவர்களிலேயே நான் 60 ரன்களில் அவுட்டானேன்.

குறிப்பாக அவர் மிகவும் மெதுவாக நேராக ஸ்லைட் ஆகும் வகையில் பந்து வீசினார். அதில் நேராக வந்த பந்துகளை நான் தவற விட்டேன். 2005, 2006, 2007 ஆகிய காலகட்டங்களில் சற்று திரும்பி நேராக வரும் பந்துகளை நான் தவற விட்டது என்னுடைய பலவீனமாக இருந்தது. அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது. ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

அதனால் தரத்திற்கும் விளையாடும் விதத்திற்கும் நான் அவர் மீது எப்போதும் தனித்துவமான மரியாதையை வைத்திருக்கிறேன். சில சமயங்களில் அவரை நான் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினேன். ஆனால் அதற்கு நிகராக அவரும் சில சமயங்களில் என்னை மிஞ்சி சவால் கொடுத்தார். அந்த போட்டியை நான் எப்போதும் விரும்புகிறேன். அதேபோல் ரஷித் கான் அதிரடியாக எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். 

சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர். குறிப்பாக முகத்துக்கு நேராக திறமையை வெளிப்படுத்தக்கூடிய அவரை நான் ஒருமுறை 3 சிக்ஸர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை