சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அப்துல்லா ஷஃபிக்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரின் முடிவில் பாகிஸ்தன் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பெர்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் மழை காரணமாக இப்போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்களைக் குவித்தது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் ஆடி சதமடித்து அசத்தியதுடன் 101 ரன்னில் ஆட்டமிழக்க, பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஹென்ரிச் கிளாசென் 81 ரன்களையும், கார்பின் போஷ் 40 ரன்களையும் சேர்த்தனர்.
அதேசமயம் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் சுஃபியான் முகீம் 4 விக்கெட்டும், நசீம் ஷா, ஷாஹின் அஃப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 36 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அப்துல்லா ஷஃபிக் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக, பார்ல் மற்றும் கேப்டவுனில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மார்கோ ஜான்சனின் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த அப்துல்லா ஷஃபிக், கடைசி ஒருநாள் போட்டியின் போது காகிசோ ரபாடா பந்துவீச்சில் 0 ரன்களில் வெளியேறியதான் காரணமாக இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் சூர்யகுமார் தொடர்ந்து மூன்று முறை 0 அவுட்டாகியுள்ளார்.
அதன்படி அவர் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகினார். இருப்பினும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த வீரர்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்தை அப்துல்ல ஷஃபிக் படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இவரைத் தவிர்த்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங், இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் சல்மான் பட், ஷோயப் மாலிக், உள்ளிட்ட பல வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வேண்டாத சாதனையைச் செய்துள்ளனர்.