ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வ்ங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர். 

Advertisement

பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 13 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 145 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரருமான இப்ராஹிம் ஸத்ரான் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர்கள் வீரர்கல் சொதப்பினர். இதில் முகமது நைம் 9 ரன்களுக்கும், கேப்டன் லிட்டன் தாஸ் 13 ரன்களிலும், நஹ்முல் ஹொசைன் ஒரு ரன்னிலும், தஹித் ஹிரிடோய் 16 ரன்களுக்கும், ஷகிப் அல் ஹசன் 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். பின் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

இதனால் 43.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி, முஜீப் உர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News