கோலியைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலியின் அரைசதத்தின் மூலமும், அக்ஸர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் குயின்டன் டி காக் 39 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 52 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 21 ரன்களுக்கு என விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அண்ணி கேப்டன் ரோஹித் சர்மா, “இதுவே என்னுடைய இறுதி போட்டி. ஓய்வு பெற இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகம் விரும்பினேன். அதனை வார்த்தைகளால் கூறுவது மிக கடினம். இதுவே நான் விரும்பியது. அது நடந்து விட்டது. என்னுடைய வாழ்க்கையில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தேன். இந்த முறை அதனை நாங்கள் கடந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 5 சதம் மற்றும் 32 அரைசதங்களுடன் ச்சேர்த்து 4,231 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே ரோஹித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.