இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக அலெக்ஸ் ஸ்டூவர்ட் நியமனம் - தகவல்!

Updated: Wed, Feb 02 2022 14:59 IST
Alec Stewart Likely To Become England's Interim Coach For West Indies Tests (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இதையடுத்து இந்தத் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணி மீண்டெழுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பரிந்துரைகளின்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) நடவடிக்கை எடுக்கவுள்ளது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள். ஆஷஸ் தோல்வியால் அவ்விருவரையும் நீக்கிவிட்டு தற்காலிகப் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்டை ஈசிபி நியமிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் பயிற்சியாளராக இருந்த கடைசி 14 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 தோல்விகளைக் கண்டுள்ளது. இதையடுத்து அவருடைய பதவி பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணிபுரிய தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளதால் அடுத்த சில வாரங்களில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

மார்ச் 8 முதல் வெஸ்ட் இண்டீஸ் உடனான 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அடுத்த வாரம் தேர்வு செய்யப்படும். பிப்ரவரி 24 அன்று வெஸ்ட் இண்டீஸிற்கு இங்கிலாந்து வீரர்கள் புறப்படுவார்கள். ஒருவேளை, பயிற்சியாளர் பதவியிலிருந்து சில்வர்வுட் நீக்கப்பட்டால் அலெக் ஸ்டூவர்ட் இங்கிலாந்து அணியின் தற்காலிகப் பயிற்சியாளராகப் பணிபுரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை