PAK vs BAN, 1st Test: முஷ்ஃபிக்கூர், லிட்டன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட வங்கதேசம்!

Updated: Fri, Aug 23 2024 19:59 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது. 

இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அனியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.

இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 16 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க வங்கதேச அணி 53 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஷாத்மன் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன, இருவரும் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 50 ரன்களில் மொமினுல் ஹக் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிய ஷாத்மன் இஸ்லாம் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் 15 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் - லிட்டன் தாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 316 ரன்களைச் சேர்த்து முன்னிலை நோக்கி நகர்ந்து வருகிறது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதில் ஆட்டமிழக்காமல் இருந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் குர்ராம் ஷஸாத் 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, முகமது அலி, சைம் அயூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 132 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணியானது நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை