டி20 உலகக்கோப்பை : சாதனை படைத்த நோர்ட்ஜே, பார்ட்மேன்!

Updated: Tue, Jun 04 2024 07:06 IST
Image Source: Google

ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவர்களில் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 19 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையடைய தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

அதன்படி அந்த அணியில் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 12 ரன்களிலும், குயின்டன் டி காக் 20 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகக்குறைந்த எகானமியில் பந்துவீசிய வீரர் எனும் சாதனையை பதிவுசெய்து அசத்தியுள்ளார். 

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் 5.17 என்ற எகானமியில் பந்துவீசியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது முறியடித்து ஆன்ரிச் நோர்ட்ஜே புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க வீரரின் மிகச்சிறந்த பந்துவீச்சாகவும் இது உள்ளது. அதேசமயம் இந்த பட்டியளின் முதல் 5 இடங்களில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தனது அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஓட்னில் பார்ட்மேன் தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக உலகக்கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை ஓட்னில் பார்ட்மேன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை