ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3ஆவது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுசாக்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Advertisement

இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின்போது லபுசாக்னே அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுசாக்னே ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது. இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் . மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Advertisement

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீசும் சிறப்பான தொடக்கம் கண்டது. 2ஆவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 18 ரன்களுடனும் , தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும்,களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று 3ஆவது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த தேஜ்நரின் சந்தர்பால் 51 ரன்களிலும் , கிரேக் பிராத்வெய்ட் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

அந்த அணியின் ஜெர்மன் பிளாக்வுட் 36 ரன்களிலும் , கைல் மேயெர்ஸ் 21 ரன்களும் ,ஜேசன் ஹோல்டர் 27 ரன்களும், புரூக்ஸ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 283 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் , பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 315 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா, மூன்றாம் நாள் ஆட்டநேர நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மார்னஸ் லபுசாக்னே சதமடித்து அசத்தினார். 


இதன்மூலம் 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்திருந்த ஆஸ்திரேலிய அணி 498 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிரெய்க் பிராத்வையிட் - சந்தர்பால் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 

Advertisement

இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சந்தர்பால் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷமாரா ப்ரூக்ஸ் 11, பிளாக்வுட் 24 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கிரெய்க் பிராத்வையிட் சதமடித்து அணியின் வெற்றிக்காக போராடி வருகிறார்.

இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிராத்வையிட் 101 ரன்களுடனும், கைல் மேயர்ஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 306 ரன்களை தேவை என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News