பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு பெர்த் நகரில் துவங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளிலேயே அரை சதமடித்தார். அவருடன் மறுபுறம் சற்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய உஸ்மான் கவஜா 126 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து 41 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஷாக்னேவும் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

Advertisement

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26ஆவது சதத்தை அடித்தார். அவருடன் எதிர்புறம் வந்த ஸ்டீவ் ஸ்மித் 3ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 32 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 4ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 40 ரன்களிலும் அவுட்டானார்கள்.

அடுத்த சில ஓவர்களிலேயே இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார். குறிப்பாக இத்தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் தன்னுடைய கடைசி தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்க்கு நிகராக 26 சதங்களை அடித்த வீரராக வார்னர் பெருமை பெற்றார். 

இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஆமீர் ஜமால் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதையடுத்து வலுவான தொடக்கத்தை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News