AUS vs PAK, 2nd ODI: அயூப், ஷஃபிக் அதிரடியில் ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அதிரடியாக தொடங்கிய ஃபிரேசர் மெக்குர்க் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட்டும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 18 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 6 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியும் 101 ரன்னிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 14 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 13 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த ஆடம் ஸாம்பா தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியானது 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவூஃப் 5 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கியா பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அவ்வபோது பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அதிரடியாக விளையாடிய சைம் அயூப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 137 ரன்களைத் தாண்டியது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் தொடர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 82 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த அப்துல்லா ஷஃபிக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் பாபர் ஆசாம் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.