சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டும் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே (நான்காவது) டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் சிறப்பு சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
500 சர்வதேச விக்கெட்டுகள்
அதன்படி இப்போட்டியில் பாட் கம்மின்ஸ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த எண்ணிக்கையை எட்டிய ஏழாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். இதுவரை ஷேன் வார்ன், கிளென் மெக்ராத், பிரட் லீ, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், நாதன் லையான் ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். இதுவரை பாட் கம்மின்ஸ் 212 போட்டிகளில் 268 இன்னிங்ஸ்களில் விளையாடி 492 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு
இதுதவிர்த்து இத்தொடரில் பாட் கம்மின்ஸ் மேலும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினின் சதனையை முறியடிப்பார். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரவி அஸ்வின் 195 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியின் நாதன் லையன் 190 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் 84 இன்னிங்ஸ்களில் விளையாடி 189 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார். நடப்பு பார்டார் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான பார்மில் இருக்கும் பாட் கம்மின்ஸ், இதுவாரை இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.