பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் தந்தனர்.
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதன்மூலம் முதல் 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைச் சேர்த்து. மேலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 99 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின் 50 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ரிஸ்வான், மேட் ஹென்றி பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமானும் முதல் பந்திலேயே மேட் ஹென்றியிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய சைம் அயுப் ரன்கள் ஏதுமின்றியும், இமாத் வாசிம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த இஃப்திகார் அஹ்மத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன் மூலம், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் ஆசாம் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 101 ரன்களைக் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - சாட் பௌஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 26 ரன்களைச் சேர்த்திருந்த பௌஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் யங்கும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தனர். அதன்பின் 19 ரன்களில் டாம் லேதமும் ஆட்டமிழந்தார்.
பின் மார்க் சாப்மேன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் அரைசதம் கடந்தார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திர ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் சாப்மேன் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.