அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது அதிரடியாக தொடங்கினாலும், அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 38 ரன்களையும், பாபர் ஆசாம் 36 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன், மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணியானது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஆசாம் கான், அடுத்தடுத்து சில கேட்ச்சுகளை தவறவிட்டார். அதிலும் குறிப்பாக ஹாரிஸ் ராவுஃப் வீசிய 9ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் வில் ஜேக்ஸ் கொடுத்த எளிதான கேட்ச் ஒன்றை தவறவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹாரிஸ் ராவுஃப் களத்திலேயே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கத்தினார்.
ஆனால் அதன்பின் அதே ஓவரின் கடைசி பந்தில் வில் ஜேக்ஸ் கொடுத்த கேட்சை மீண்டும் ஆசாம் கான் கைப்பற்றினாலும், விக்கெட் வீழ்ந்தது குறித்து எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. அதேபோல் அவர் பேட்டிங்கிலும் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இந்நிலையில், அசாம் கான் கேட்ச் விட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.