டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பாபர் ஆசாம்!

Updated: Sat, Dec 14 2024 08:32 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவ்து டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடைபெறறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சைம் அயூப்பில் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சைம் அயூப் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 98 ரன்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து பாபர் அசாம் 31 ரன்களையும், இர்ஃபான் கான் 30 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அறிமுக வீரர் தயான் கலீம் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய மேத்யூ பிரிட்ஸ்கீ 12 ரன்னிலும் விக்கெட்டை இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். பின் 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் 117 ரன்களை எடுத்த நிலையில் ஹென்றிக்ஸ் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த வான்டெர் டுசன் 66 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரீஸ ஹென்றிக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

11000 டி20 ரன்கள்

அந்தவகையில், இப்போட்டியில் பாபர் ஆசாம் 11 ரன்களை கடந்தபோது டி-20 கிரிக்கெட்டில் 11000 ரன்களைக் கடந்த பாகிஸ்தானின் இரண்டாவது மற்றும் உலகளவில் 11ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை 308 போட்டிகளில் 297 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 11,020 ரன்களை எடுத்துள்ளார். இவருக்கு முன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் 545 போட்டிகளில் விளையாடி 13,415 ரன்களைச் சேர்த்துள்ளார். அதேசமயம் உலகளவில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 455 போட்டிகளில் விளையாடி 14562 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

14000 சர்வதேச ரன்கள்

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து பாபர் ஆசாம் இப்போட்டியில் 2 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 14000 ரன்களை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டும் பாகிஸ்தானின் ஐந்தாவது வீரர் எனும் பெருமையும் அவர் பெற்றுள்ளார். மூன்று வடிவங்களையும் சேர்த்து 303 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 14, 029 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன், இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுப், ஜாவேத் மியான்தத் ஆகியோர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை