BAN vs NZ, 2nd ODI: சோதி பந்துவீச்சில் வீழ்ந்தது வங்கதேசம்!

Updated: Sat, Sep 23 2023 21:38 IST
BAN vs NZ, 2nd ODI: சோதி பந்துவீச்சில் வீழ்ந்தது வங்கதேசம்! (Image Source: Google)

ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர்.  இதில் வில் யங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, ஃபின் ஆலன் 12 ரன்களுக்கும், சாத் பௌஸ் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹென்றி நிக்கோலஸ் - டாம் பிளெண்டல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்றி நிக்கோலஸ் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 10 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் கடந்திருந்த டாம் பிளெண்டலும் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 68 ரன்கள் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் கோல் மெக்கன்ஸி, இஷ் சோதி, கைல் ஜேமிசன் என ஓரளவு ரன்களைச் சேர்க்க நியூசிலாந்து அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 254 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் கலெத் அஹ்மத், மஹெது ஹசன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.      

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் 6 ரன்களிலும், தன்ஸித் ஹசன் 16 ரன்களிலும், சௌமியா சர்கார் ரன்கள் ஏதுமின்றியும், தாஹித் ஹிரிடோய் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த தமிம் இக்பால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த மஹ்மதுல்லாவும் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களில் ஆட்டமிழந்து நூலிழையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்தி களமிறங்கிய மஹெதி ஹசன், நசும் அஹ்மத், ஹசன் மஹ்முத், கலெத் அஹ்மத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தி வீழ்த்தி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 15 ஆண்டுகளுக்க்கு பிறகு வங்கதேசத்தில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை