BAN vs PAK : மீண்டும் மிரட்டிய ரிஸ்வான்; வங்கதேசத்திற்கு 168 டார்கெட்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் அங்கு நியூசிலாந்து அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின.
கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பாபர் ஆசாம் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷான் மசூதும் 31 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய முகமது ரிஸ்வான் இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 78 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.