பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி!

Updated: Wed, Jan 10 2024 22:14 IST
பிபிஎல் 13: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மைக்கேல் நேசர்; பிரிஸ்பேன் ஹீட் அசத்தல் வெற்றி! (Image Source: Google)

பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா - காலின் முரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே - சாம் பில்லிங்ஸ் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 45 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சாம் பில்லிங்ஸும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மைக்கேல் நேசர் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 64 ரன்களைக் குவித்தார். 

இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ரன்களைக் குவித்தது. பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் பெஹ்ரண்ட்ராஃப், ஆஷ்டன் அகர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் அணிக்கு ஸாக் கிரௌலி - சாம் வைட்மேன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி 13 ரன்களுக்கும், சாம் வைட்மேன் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆரோன் ஹார்டி 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த ஜோஷ் இங்லிஸ் - லௌரி எவான்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பின் 28 ரன்களில் ஜோஷ் இங்லிஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த லௌரி எவான்ஸும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கூப்பர் கன்னொலி, ஆஷ்டன் அகர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. பிரிஸ்பேன் அணி தரப்பில் மைக்கேல் நேசர், ஸேவியர் பார்ட்லெட், ஸ்பென்ஸர் ஜான்சன் மற்றும் பால் வால்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை