பிபிஎல் 13: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜோஷ் பிலிப் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேனியல் ஹூயுக்ஸ் 2 ரன்களிலும், கேப்டன் ஹென்றிக்ஸ் 5 ரன்களிலும், ஜோர்டன் சில்க் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - ஜேக் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 83 ரன்களில் வின்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் 30 ரன்கள் எடுத்திருந்த எட்வர்ட்ஸும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. மெல்போர்ன் அணி தரப்பில் உஸாமா மிர் , ஹாரிஸ் ராவூஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் அணி தரப்பில் தாமஸ் ரோஜர்ஸ் 20 ரன்களிலும், சாம் ஹார்பர் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வெப்ஸ்டர் ஒருபக்கம் சிறப்பாக விளையாட மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல் 12 ரன்களுக்கும், ஸ்டொய்னிஸ் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து 35 ரன்களை எடுத்திருந்த வெப்ஸ்டரும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த காட்ரைட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.