பிபிஎல் 13 நாக் அவுட் : பெர்த் ஸ்காச்சர்ஸ் வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி ஆர்சி ஷார்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மேத்யூ ஷார்ட் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வெதர்லெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய தாமஸ் கெல்லி 6 ரன்களுடனும், ஹாரி நெய்ல்சன் ஒரு ரன்னுடனும் என ஆட்டமிழந்தனர்.
இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த வெதர்லெட் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பென் மனெட்டி 23, தொர்ண்டன் 28 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹாரோன் ஹார்டி மற்றும் கூப்பர் கனொலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கு சாம் ஃபன்னிங் - மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய சாம் ஃபன்னிங் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஹாரிஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹாரோன் ஹார்டி 6 ரன்களிலும், வைட்மேன் 2 ரன்களிலும், ஜோஷ் இங்லிஸ் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கூப்பர் கனொலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய நிக் ஹாப்சன், ஆஷ்டன் அகர், ஆண்ட்ரூ டை, ஜேசன் பெஹ்ரண்டராஃப் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 16.2 ஓவர்களிலேயே பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடிலெய்ட் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லியாட் போப் 4 விக்கெட்டுகளையும், கேமரூன் பொய்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு பிபிஎல் தொடரின் சேலஞ்சர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து அந்த அணி சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.