பிபிஎல் 13: ஹியூஸ் அதிரடி; ஹரிகேன்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Mon, Dec 11 2023 20:52 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக்கின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மேத்யூ வேட் - கலெப் ஜெவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் வேட் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஜெவெல் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய பென் மெக்டர்மோட் 11, சாம் ஹைன் 3, டிம் டேவிட் ஒரு ரன்னுக்கும, கோரி ஆண்டர்சன் 17, கிறிஸ் ஜோர்டான் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் டாம் கரண் 3 விக்கெட்டுகளையும், ஜாக் எட்வர்ட்ஸ், துவார்ஷூயிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து களமிறங்கிய களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஜோஷ் பிலீப் 16 ரன்களுக்கும், ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டேனியல் ஹியூஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் ஹென்றிக்ஸ் 20 ரன்களுக்கும், ஜோர்டன் சில்க் 23 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் ஹியூஸ் 60 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை