ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாதன் எல்லிஸ் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹொபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு ஜேசன் சங்கா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களுமாக விளாசி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய ஜேசன் சங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ கில்க்ஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸூம் 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் சங்கா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஒலிவியர் டேவிஸ் 26 ரன்களையும், கிறிஸ் கிரீன் 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு மிட்செல் ஓவன் மற்றும் கலெப் ஜுவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜுவெல் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய நிலையில், மறுமுனையில் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய வந்த மிட்செல் ஓவன் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடி வந்த கலெப் ஜூவெல் 13 ரன்களுக்கும், நிகில் சௌத்ரி ஒரு ரன்னிலும் என ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடி வந்த மிட்செல் ஓவன் 39 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். 

பின் 6 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என 108 ரன்களை எடுத்த நிலையில் மிட்செல் ஓவன் தனது விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ வேட்5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களையும், பென் மெக்டர்மோட் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் பிபிஎல் தொடர் வரலாற்றில் முதல் முறையாக ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News