14ஆவது சீசன் பிக் பேஷ் தொடரில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோஷ் பிலீப் 9 ரன்களுக்கும், கர்டிஸ் பேட்டர்சன் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஹென்றிக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தை கடந்த பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஹென்றிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத ஸ்டீவ் ஸ்மித் பிக் பேஷ் லீக் தொடரில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 121 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சிட்னி சிக்ஸர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய பெர்த் அணியில் ஃபின் ஆலன் 15 ரன்களிலும், ஆரோன் ஹார்டி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் ஃபேன்னிங் மற்றும் கூப்பர் கன்னொலி ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கூப்பர் கன்னொலி 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் ஃபேன்னிங்கும் 41 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஹார்டி ஒரு பக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை போராடிய ஆரோன் ஹார்டி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்த நிலையில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. சிட்னி சிக்ஸர்ஸ் அணி தரப்பில் சீன் அபோட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News