விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல - ஜெய் ஷா!

Updated: Thu, Feb 15 2024 12:46 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக முதலில் இரண்டு போட்டிகளிலிருந்து மட்டும் விலகினார். ஆனால் அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதையடுத்து வரவுள்ள ஐபிஎல் மற்ரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி பங்கேற்பார என்ற கேள்விகள் எழுந்தன.

 

இந்நிலையில் ராஜ்கொட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம், டி20 உலகக்கோப்பை தொடரிலாவது விராட் கோலி பங்கேற்பாரா? என்று  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய் ஷா, “தனது 15 வருட கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கோரியிருக்கிறார். அது அவரது உரிமை. விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல. இச்சமயத்தில் நாம் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்குத் துணை நிற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்றும், இந்திய அணிக்கு துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்பதையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை