பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் சாம் கொன்ஸ்டாஸ்!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது.
இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. இதில் நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் இத்தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறினார்.
இதனால் அணியின் தொடக்க வீரரை மாற்றும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உள்ளர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாம் கொன்ஸ்டாஸுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 11 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சாம் கொன்ஸ்டாஸ் அதில் 2 சதம், 3 அரைசதங்கள் என 42.2 என்ற சராசரியில் 718 ரன்களை எடுத்துள்ளார்.
இதுதவிர்த்து இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஜெய் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர்த்து இத்தொடரில் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.