ரோஹித் தொடக்க வீரராக விளையாடினால், ராகுல் 3-ம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - புஜாரா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகியது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தினர்.
தற்சமயம் ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் அடுத்த போட்டியில் இருந்து அவர் மீண்டும் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன், அணியின் தொடக்க வீரராகவும் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் எந்த வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினால், கேஎல் ராகுல் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்டர் சட்டேஷ்வர் புஜாரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை, இத்தொடரில் நாம் கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை அதே பேட்டிங் ஆர்டரில் நாம் களமிறங்க வேண்டும்.
இதன் காரணமாக ரோஹித் சர்மாவை மூன்றாம் இடத்திலும், ஷுப்மன் கில்லை 5ஆம் வரிசையிலும் நம்மால் விளையாட வைக்கமுடியும். ஒருவேளை ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க விரும்பினால், அப்போது நாம் மூன்றாம் இடத்தில் கேஎல் ராகுலை களமிறக்கலாம். ஏனெனில் கேஎல் ராகுலை நாம் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் து அவரது ஆட்டத்திற்கு மிகவும் பொருத்தமானது. மேலும் அவரைச்சுற்றி அணியை நம்மால் கட்டமைக்க முடியும்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் நான் ஷுப்மன் கில்லை 5ஆம் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று கூறியதற்கான காரணம், அவர் புதிய பந்தில் சற்று தடுமாறினாலும், 25 அல்லது 30 ஓவர்களுக்குப் பிறகு அவர் களமிறங்கும் பட்சத்தில் அவரால் தனது ஷாட்களை விளையாட முடியும். அவர் தனது இயல்பான விளையாட்டை விளையாட முடியும். அதேபோல் மூன்று விக்கெட்டுகளுக்கு பிறகு ஷுப்மன் கில் விளையாடும் பட்சத்தில் அவர் ரிஷப் பந்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட உதவும்” என்று தெரிவித்துள்ளார்.