இந்திய அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்; புஜாரா கருத்து!

Updated: Tue, Dec 10 2024 20:14 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பிளெயிங் லெவனில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும் என்று புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சட்டேஷ்வர் புஜாரா, “என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் நிகழலாம் என்று நினைக்கிறேன். பேட்டிங் சரியாக இல்லாததால், அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கலாம். மேலும் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக யாராவது வர வேண்டுமா? என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரை இல்லை என்பது தான் எனது கருத்து. ஏனெனில் அவர் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவருக்கு சில வாய்ப்புகளை தர வேண்டும். 

மேலும் அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர். ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் வரிசை வலுப்பெற வேண்டும் என்று அணி கருதினால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே மாற்றமாக இருக்க முடியும். அது தவிர இந்திய அணி வேறெந்த மாற்றங்களையும் செய்யாது” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை