ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் அவரது கேப்டன்சியையும் பாதிக்கலாம் - ஹர்பஜன் சிங்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், பதிலுக்கு ஆஸ்திரேலிய அணியோ முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைக் குவித்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறியதுடன் 175 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் அஸ்திரேலிய அணிக்கு வெறும் 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்திருந்தது.
அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுட்ன், அது அவரது தலைமைத்துவ திறமையை பாதிக்கும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இவ்வளவு பெரிய வீரர் ரன்களை எடுக்காதபோது, அது சற்று கவலையை ஏற்படுத்தும். ரோஹித் அபார திறமை கொண்டவர் என்பதும், இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்ததும் எங்களுக்கு தெரியும். இருப்பினும், இந்தப் போட்டியிலும் முந்தைய தொடரிலும் அவர் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் அவர் ரன்கள் எடுக்காத போது, பேட்டிங்கில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்திய கேப்டனுக்கு சொந்த ரன்களை அடிக்கும் அழுத்தம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அது அவரது கேப்டன்சியையும் பாதிக்கலாம்.
Also Read: Funding To Save Test Cricket
அவர் மீண்டும் பார்முக்கு வருவார் என நம்புகிறோம். பிறிஸ்பேன் போன்ற மற்ற மைதானங்களின் நிலைமைகள் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர் இந்தப் போட்டியை விட்டுவிட்டு, முன்னோக்கிச் செல்வதற்கு என்ன சிறப்பாகச் செய்ய முடியும் மற்றும் அணி எவ்வாறு சிறப்பாக விளையாட முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும், ஏனெனில் அவரது ஃபார்மை விட தற்போது அணியின் செயல்திற்னே முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.