ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!

Updated: Tue, Feb 21 2023 20:26 IST
Image Source: Google

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

டெல்லி டெஸ்டில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வந்த ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பகுதியிலேயே 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையை, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முற்றிலுமாகச் சிதைத்தார். அவருக்கு அஸ்வினும் துணை நிற்க, சுழலியே சுருண்டது ஆஸ்திரேலியா. 

பின்னர் 114 ரன்களை நோக்கி பேட்டிங் செய்த இந்தியா, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.. 

இந்நிலையில் இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களுக்கு உதவத் தயார் என ஆஸி. முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலிய அணிக்கு எந்நேரமும் நான் உதவத் தயார். எப்போது என்னிடம் இதுபற்றி கேட்டாலும் சம்மதம் தான் சொல்லியுள்ளேன். சிறந்த அறிவுரை வேண்டும் என்றால் முன்னாள் வீரர்களை கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை