இப்போது உலகின் சிறந்த டெஸ்ட் பேட்டர் ஹாரி புரூக் தான் - ரிக்கி பாண்டிங் பாராட்டு!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் இருந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து அசத்தியதன் காரண்மாக ஹாரி புரூக் முதலிடம் பிடித்து ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் ஹாரி புரூக் தான் என முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இப்போது உலகின் சிறந்த டெஸ்ட் பேட்டராக ஹாரி புரூக் இருக்கிறார். அவர் சில அற்புதமான விஷயங்களைச் செய்கிறார், அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் செய்துவருகிறார். அவரின் ஒட்டுமொத்த டெஸ்ட் சதங்களை எடுத்துகொண்டால் அதில் 7 சதங்களை வெளிநாடுகளில் மட்டுமெ அடித்து அசத்தியுள்ளார். அதுவே அவருக்கு ரன்களை சேர்ப்பத்ற்கும் உதவியாக இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ள ஹாரி புரூக் அதில் இரண்டு சதங்கள், ஒரு அரைசதம் என 349 ரன்களை குவித்துள்ளார். அதேசமயம் கடந்த 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி புரூக் 23 போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் 10 அரைசதங்கள் என 2,280 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6.25 கோடிக்கு ஹாரி புரூக்கை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.