சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அதன்பின் 56 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரியில் அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 7 பவுண்டரிகளுடன் 100 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 14000 ரன்கள்
இப்போட்டியில் விராட் கோலி 15 ரன்களைக் கடந்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14ஆயிரம் ரன்களை குவித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 350ஆவது இன்னிங்ஸில் 14000 ரன்களை எடுத்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது.
ஆனால் தற்போது விராட் கோலி தனது 287ஆவது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டி புதிய வரலாறு படைத்துள்ளார். இதுதவிர்த்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் உலகளவில் மூன்றாவது வீரார் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8000, 9000, 10000, 11000, 12000, 13000 மற்றும் 14000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் சச்சின் டெண்டுல்கரை விட 63 குறைவான இன்னிங்ஸ்களில் 14,000 ஒருநாள் ரன்களை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம்
பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 51ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுக்லரின் சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக 50+ ஸ்கோர்
இப்போட்டியில் விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக 50+ ஸ்கோரை அடித்த வீரர் எனும் சாதனையையும் சமன்செய்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஷிகர் தவான், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் தலா 6 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது விராட் கோலியும் 6ஆவது 50+ ஸ்கோரை பதிவுசெய்து அவர்களது சாதனையை சமன்செய்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகள்
பாகிஸ்தான் அணி வீரர் நஷீம் ஷாவின் கேட்ச்சை விராட் கோலி பிடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகள் பிடித்த வீரர் எனும் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். முன்னதாக முகமது அசாருதீன் 156 கேட்ச்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது விராட் கோலி 157 கேட்ச்சுகளைப் பிடித்து அவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket