மிட்செல் மார்ஷின் கேப்டன்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!

Updated: Tue, Mar 12 2024 13:31 IST
மிட்செல் மார்ஷின் கேப்டன்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம்  அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதன் குழுக்களையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. 

இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தனது ஓய்வை அறிவித்ததிலிருந்து அந்த அணியின் கேப்டன்களாக பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்களாக செயல்பட்டு வந்துள்ளனர். 

இதில் யார் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் தலைமையில் அபாரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 12 மாதங்களில் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ளது. 

இதனால் நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் மிட்செல் மார்ஷ் தான் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற தகவல் வெளியாகின. இந்நிலையில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தான் என்பதனை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிசெய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவின் டி20 அணியை வழிநடத்திச் செல்லும் மிட்செல் மார்ஷின் திறன் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அணியை வழி நடத்திச் செல்ல அனைத்தும் தயாராக இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் நாங்கள் சரி எனச் சொல்ல வேண்டியுள்ளது. மிட்சேல் மார்ஷ் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்று நாங்கள் நினைக்கிறோம், அது சரியான நேரத்தில் நடக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை