சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? - பதிலளிக்க மறுத்த கம்பீர்!

Updated: Thu, Jan 02 2025 10:58 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மறுபக்கம் ரிஷப் பந்தும் இப்போட்டியில் விளையாடுவார் என்பதும் சந்தேகம் தான். இதன் காரணமாக பிரஷித் கிருஷ்ணா மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் இடம்பிடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் கேப்டன் ரோஹித் சர்மாவின் இடம் குறித்த கேள்விகளும் எழுந்துவரும் நிலையில், அவரும் இப்போட்டியில் விளையாடுவார் என்பது தெரியவில்லை. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காமல், அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டுமே பங்கேற்றார். இதையடுத்து ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காதது குறித்து எழுப்பட்ட கேள்வி பதிலளித்த கம்பீர், “ரோஹித்துடன் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதேசமயம் செய்தியாளர் சந்திப்பில் அணியின் கேப்டன் பங்கேற்க வேண்டும் என்பது பாரம்பரியமானது என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய கம்பீர், “செய்தியாளர் சந்திப்பில் அணியின் தலைமை பயிற்சியாளர் பங்கேற்றாலே போதுமானது என நினைக்கிறேன். நாளை நாங்கள் மைதானத்தின் பிட்சை பார்த்த பிறகு எங்களின் அணியில் விளையாடும் வீரர்களை இறுதி செய்யப்போகிறோம். எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும், இங்கு டெஸ்ட் போட்டியை வெல்லக்கூடிய அனைத்தையும் நாங்கள் செய்துவருகிறோம். இங்கே மட்டுமல்ல, எதிர்காலத்திலும் சில நம்பமுடியாத விஷயங்களைச் செய்யவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுப்பட்ட நிலையில் அதற்கு கம்பீர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனால் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் ரோஹித் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி அதிகரித்துள்ளது. ஒருவேளை ரோஹித் இடம்பெறாத பட்சத்தில் ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற தகவல்களும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை