சிபிஎல் 2021: ரூதர்ஃபோர்ட், பிராவோ அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் அதிரடி வீரர்கள் லூயிஸ், கிறிஸ் கெயில், ஆசிஃப் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரூதர்ஃபோர்ட் - டுவைன் பிராவோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ரூதர்ஃபோர்ட் அரைசதமடித்தும் அசத்தினார். பின் 53 ரன்களில் ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுவைன் பிராவோ 47 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. பார்போடாஸ் அணி தரப்பில் ஒஷேன் தாமஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பார்போடாஸ் அணியில் ஷாய் ஹோப், ஆசம் கானை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன்மூலம் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் அரைசதமடித்த ரூதர்ஃபோர்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.