சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!

Updated: Thu, Sep 26 2024 09:11 IST
Image Source: Google

12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதனையடுத்து களமிறங்கிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அசாம் கான் 26 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த ஷிம்ரான் ஹெட்மையர் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 5 பவுண்டரில் 5 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஷெஃப்பர்ட் 26 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. ராயல்ஸ் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷ்னா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் கதீம் அலீன் ஒரு ரன்னிலும், அலிக் அதானாஸ் 8 ரன்களிலும், அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 35 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர், கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்திருந்த டேவிட் மில்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்த நிலையிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததன் காரணமாக, பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. கயானா அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை